உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் - 17

 மனத்தினுருவை மறவா துசாவ
மனமென வொன்றிலை யுந்தீபற
மார்க்கநே ரார்க்குமி துந்தீபற. [17]


மனத்தின் உருவை மறவாது சாவ
மனம் என ஒன்று இ[ல்]லை உந்தீ பற
மார்க்க[ம்] நேர் ஆர்க்கும்[யார்க்கும்] இது உந்தீ பற.


விளக்கம்


மனத்தின் உருவத்தை மறதியின்றி ஆராய்ந்தால் , மனம் என்ற ஒன்று இல்லை என்பது விளங்கும். இதுவே நேர்வழி என்பதும் விளங்கும்.
 

விளக்க உரை

மனம் எவ்வாறு உள்-ஒளி பெறலாம் என்பதை இப்பாடலில் ரமணர் கூறுகிறார். மனதை மிகவும் விழிப்புடன், மறதியின்றி, உன்னிப்பாக கவனித்தால் மனம் என்ற ஒன்று இல்லை என்பது விளங்கும். மேலும் மனம் என்பது 'நான்' (Self) என்பது புலப்படும். இந்த 'நான்' என்பதும் துய்மையான, இருப்பும், உணர்வும் ( Existence and Consciousness) மட்டுமே. இது கயிறு, பாம்பு போல் தோன்றினாலும், கண்ணுக்கு கயிறு தோன்றினால் பாம்பு புலப்படாது. பாம்பு தோன்றினால் கயிறு புலப்படாது என்ற உதாரணம் போன்றது.

மற்ற பல ஆன்மிக வழிகளில் மனதை நான் என்பதை தவிர்த்து பிறிதொரு தனியான பொருளாக கருதுகிறார்கள். மனதை கட்டுப்படுத்த, தூய்மைபடுத்த, மனதை இறைவழி காண வழிகள் கூறப்பட்டுள்ளன. மனதை, மனதைக்கொண்டே கட்டுப்படுத்த இயலாது.  மனம் என்றுமே கட்டுப்பட விரும்பாது.  இது திருடனை பிடி என்று திருடனிடமே பொறுப்பை ஒப்படைப்பது போன்றது. அது நடவாத காரியம். மனம் என்று தனியே ஒன்றில்லை என்பதை முதலில் . அறியவேண்டும். பின் மனம் என்பது 'நான்' என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுது மனம் பற்றிய தெளிவு பிறக்கும். ரமணரின் மனம் பற்றிய கோட்பாடு தலை சிறந்தது என்பது இதிலிருந்து விளங்கும்.

அப்போது மனம் என்பது இல்லை என்றால், மனம் என்பது என்ன? பின்வரும் பாடலில் காண்போம்.
 


HOME