உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 13
இலயமு நாச மிரண்டா மொடுக்க
மிலயித் துளதெழு முந்தீபற
வெழாதுரு மாய்ந்ததே லுந்தீபற. [13]
இலயமும் நாசம் இரண்டாம் ஒடுக்க
இலயித்துளது எழும் உந்தீ பற
எழாது உரு மாய்ந்ததேல் உந்தீபற.
விளக்கம்
மனோலயம் தற்காலிகமானது. மனோ நாசம் நிரந்தரமானது.
விளக்க உரை
உறக்கத்தின்
போதும், நினைவற்று இருக்கும் போதும் (ஒருசிலர் மது அருந்தி தீய வழியில் இந்நிலை
அடைகிறார்கள்), நாம் மனோலயம் பெறுவதால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.
மீண்டும் நினைவுக்கு வரும்போது அந்த அனுபவத்தை இழக்கிறோம். நிரந்தரமாக மகிழ்ச்சியில்
இருக்க மனதை முற்றிலுமாக வேரறுக்க வேண்டும். இதுவே மனோ நாசம். அப்பொழுது மனம்
மீண்டும் எழாது. இது உயர்ந்த ஆன்மிக அனுபவம்.
மனதை இரண்டு
வழிகளில் ஒடுக்கலாம். லயம் (மனோலயம்) என்பது தற்காலிகமாக மனதை ஒடுக்குதல்.. இதனால்
மனம் மீண்டும் எழும். மனத்தை உரு மாய்த்தல் (மனோநாசம்) நிரந்தரமாக மனதை மாய்க்கும்.
இதற்கான உபாயங்களை பின் வரும் பாடல்களில் ரமணர் கூறுகிறார்.