உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் -4
திடமிது பூசை செபமுந் தியான
முடல்வாக் குளத்தொழி லுந்தீபற
வுயர்வாகு மொன்றிலொன் றுந்தீபற. [4]
திடம் இது பூசை செபமும் தியானம்
உடல் வாக்கு உளத்தொழில் உந்தீ பற
உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற.
விளக்கம்
பூஜை, ஜபம், தியானம் முறையே
உடல், சொல், மனம் ஆகியவற்றின் செயல்கள் ஆகும்
ஒன்றைவிட பின்வருவது சிறந்தது.
விளக்க உரை
பூஜை என்பது உருவ வழிபாடு. ஜபம் என்பது சொல் வழிபாடு. தியானம் என்பது மன வழிபாடு.
இதில் பூஜை உடலால் செயப்படுவதால், இது வழக்கமான இயக்கமாக கருதப்படுகிறது. பூஜையை விட ஜபம் செய்யும்போது மனம் திசை தவற வாய்ப்பு குறைவு. தியானம் மற்ற இரண்டை விட சிறந்ததாக கருதப்படுகிறது. காரணம் தியானத்தின் போது மனதின் போக்கு அறிந்து வழிபாட்டுக்கு எளிதில் திரும்ப முடியும்.
கடவுளை நாடுவோர் பூஜை, ஜபம், தியானம் இவற்றை வெவ்வேறு அளவுகளில் தங்களால் முடிந்த அளவு தனியாகவோ சேர்த்தோ செய்வது வழக்கம். ‘காயேனவாசாமனஸா’ என
உடல் (பூஜை) , வாக்கு (ஜபம்), மனம் ( தியானம்) என மூன்று வகையிலும் கடவுளை வழிபட இயலும்.
இதில் தியானம் மிக சிறந்ததாக வலியுறுத்தபடுவது ஏனென்றால் தியானம் மனதை தூய்மை செய்வதோடு "நான் யார்" என்ற மிக முக்கிய விசாரணைக்கு அடிப்படையாக அமைகிறது.