உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் -2


வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடு முந்தீபற
வீடுதரலிலை யுந்தீபற [2]

வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீ பற
வீடு தரல் இ[ல்]லை உந்தீ பற.


விளக்கம்

செய்யும் வினையால் விளைவதும் வினையே
இதுவே தொடர்ந்து வினைக்கடல் ஆழ்த்தும்
வீடுபேறு இயலாமல் போய்விடும். 

விளக்க உரை

ஒரு செயல் செய்கையில், அதனைத் தொடர்ந்து வருகின்ற வினைப்பயன் மேலும் மேலும் பல வினைகளைச் செய்யவைத்து நம்மை வினை என்கின்ற ஆழ்கடலில் ஆழ்த்திவிடும்.

 

 

இந்தியாவின் பிரபலமான ஒரு மிகப் பெரிய மென்பொருள் நிறுவன அதிபர், இந்தியாவின் ஒரு மிகப் பிரபலமான பெரிய உணவக அதிபர் போன்றோரை இதனுடன் பொருத்திப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். இந்த வினைக்கடலில் ஆழ்ந்தவரால் வீடுபேறு என்பது அடையமுடியாத ஒன்றாகிப் போய்விடுகிறது.

ஒரு தொழில் தொடங்கி, அது வளர, வளர, அதன் செயல்பாடுகள் மேலும் விரிவடைகின்றன. அல்லது அது நட்டத்தில் செல்ல, அதனைத் தொடர்ந்தும் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. ஆகவே ஒரு வினை மற்றொரு வினையுடன் பிணைந்து வினைகடலில் ஒருவனை ஆழ்த்தும். 

இங்கே குறிப்பிட்டுள்ள செயல்கள் பலனைக் கருதி செய்யப்பட்டவை. இவை யாவும் மிக குறுகிய பலனை மட்டுமே தரும். நல்ல செயல்கள் யாவும் நிரந்தர பலனை தரும் என்று அறுதியிட்டு கூறமுடியாது. பலன்களின் அடிப்படையே அவை விரைவாக தீர்ந்துவிடும். அப்பலன்களை தக்க வைக்க மென்மேலும் பல செயல்களை செய்ய அவை ஒருவனிடம் விருப்பம், ஆசை, செயல், உள் விருப்பம், மறு செயல் என செயல் கடலில் மூழ்கி ஒருவன் சிறைபட்டு அடிமை ஆகும்போது மீளாத வினைக்கடலில் சிக்கி சுதந்திரத்தை இழக்கிறான். 

இதன் எளிய தீர்வாக ரமணர் எல்லா செயல்களையும் கடவுளுக்கே அர்பணிக்க அடுத்த பாடலில் அறிவுறுத்துகிறார். 

 

HOME